நிச்சயமாக இறைவனான அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற எவரையும்
நீங்கள் வணங்காதீர்கள்.
உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவனான அல்லாஹ்வே நங்கறிவான், நீங்கள்
நன்னடத்தை உடையவர்களாக இருப்பதே உங்களுக்கு மிக நல்லது. நிச்சயமாக அல்லாஹ் தனது கட்டளைகளைப்
பேணி, தன் பக்கம் திரும்புபவர்களின் பாவங்களை மன்னிப்பவனாக இருக்கின்றான்.
பெற்றோர்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். குறிப்பாக, வயது
முதிர்ந்தபெற்றோர்களை ‘ச்சீ’ என்றும்
கூறாதீர்கள். அவர்களை அதட்டிப் பேசாதீர்கள். அவர்களிடம் மிக மரியாதையாகவும் கண்ணியமாகவும்
பேசுங்கள். அவர்களுடன் அன்போடும், பணிவோடும் நடந்து கொள்ளுங்கள். மேலும், “என்
இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது மிக்க அன்புடன் என்னை அவர்கள் வளர்த்தது
போன்று, நீ அந்த இருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!” என்று அவர்களுக்காக
பிரார்த்தனை புரியுங்கள்.
உறவினர், ஏழை, வழிப்போக்கர் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளைக் கொடுத்து
வாருங்கள், பொருளை அளவு கடந்து செலவு செய்யாதீர்கள். அளவு கடந்து செலவு செய்வோர்,
ஷைத்தானின் சகோதரர்கள் ஆவார். ஷைத்தானோ, இறைவனுக்கே மாறு செய்த நன்றி
கெட்டவனாவான்.
நீங்கள் வசதியில்லாத நிலையில், அல்லாஹ்வின் புறத்திலிருந்து செல்வத்தை
எதிர்பார்த்திருக்கும் சமயத்தில், யாரேனும் தனது தேவைக்காக உங்களிடம் வரும்போது,
உங்களால் அவர்களுக்குக் கொடுக்க இயலாமல் ஆகிவிட்டால், அவர்களிடம் கடுகடுப்பாகப்
பேசிவிடாமல் அன்பான வார்த்தைகளையே கூறி அனுப்பி விடுங்கள்.
அல்லாஹ் மனித உயிர்கள் அனைத்தையும் கண்ணியப்படுத்தி இருக்கின்றான். ஆகவே,
உரிமையின்றி அநியாயமாக எவரையும் நீங்கள் கொல்லாதீர்கள். ஒருவர் அநியாயமாகக்
கொல்லப்பட்டால்அவரின் வாரிசுக்கு பழிதீர்க்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த
வாரிசுக்கு நியாயமான முறையில் நீங்கள் உதவி செய்யுங்கள். கொலை செய்யப்பட்டவருக்காக
பழிவாங்க நினைக்கும் வாரிசுதாரர் வரம்பு மீறிட வேண்டாம்
உங்கள் பொருட்களை நல்வழியில் செலவு செய்யாது, கைகளை இறுக
மூடிக்கொள்ளாதீர்கள் அதனால் நீங்கள் பழிக்கப்படுவீர்கள். மேலும், உங்களிடம்
இருப்பதையெல்லாம் கொடுக்க கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள். அதனால் நீங்கள்
கைசேதத்திற்குள்ளாகி விடுவீர்கள்.
நிச்சயமாக உங்கள் இறைவன், தான் நாடியவருக்கு அதிகமாக கொடுக்கிறான்; தான்
நாடியவருக்கு குறைத்தும் கொடுக்கிறான். உண்மையில், அவனே தன் அடியார்களை
நன்கறிந்தவன்; அவர்களின் செயல்களை உற்று நோக்குகின்றவன். ஆகவே, ஒவ்வொருவரின்
தகுதிக்கு தக்கவாறு கொடுக்கின்றான்.
நீங்கள் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள்.
அல்லாஹ்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுகிறான்.
அவர்களைக் கொல்வது, நிச்சயமாக மிகப் பெரும் பாவமாகும். நீங்கள் விபசாரத்தின்
அருகில்கூட செல்லாதீர்கள். உண்மையாக அது ஒரு மானக்கேடான செயலாகவும், தீய
வழியாகவும் இருக்கின்றது
அநாதைகளின் சொத்துகளை மிக அழகிய முறையில் நிர்வகியுங்கள். அவர்கள்
பருவமடைந்துவிட்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.
நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ், வாக்குறுதியைப் பற்றி மறுமையில் விசாரணை செய்வான்
நீங்கள் அளந்து கொடுக்கும்போது நிறைவாக அளக்கவும்; நிறுத்துக்
கொடுக்கும்போது முற்றிலும் சரியான தராசைக் கொண்டு நிறுக்கவும். கொடுக்கல்
வாங்கலில் இதுவே மிகச் சிறந்த்தும் மிக அழகிய முறையும் ஆகும்
நீங்கள் உறுதியாக அறியாத எந்த ஒரு விஷயத்தியும் பின்பற்றாதீர்கள் !
நிச்சயமாக காது, கண், இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றின் செயல்களைப் பற்றியும் அல்லாஹ்
மறுமையில் விசாரணை செய்வான்.
நீங்கள் பூமியில் பெருமையுடன் நடக்காதீர்கள். நிச்சயமாக பூமியைப் பிளந்து
விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது. இவை அனைத்தும் உங்கள்
இறைவனான அல்லாஹ்விடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்; அவன் தன் தூதர்
மூலமாக மனித சமுதாயத்திற்காக வழங்கிய அறிவுரைகளாகும்
ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுடன் மற்ற எவரையும்
வணக்கத்திற்குரியவராக ஆக்காதீர்கள். அவ்வாறு செய்தால் இழிவுப்படுத்தப்பட்டு,
நன்மையை இழந்து நரகில் தூக்கி வீசப்படுவீர்கள்.
0 Comments