Arafa Day Special | அரஃபா தினம் பற்றிய சிறிய தொகுப்பு, படியுங்கள் ஆர்வமாக இருக்கும்

 அரஃபா தினத்தில் நடக்கும் ஒரு  சில நிகழ்வுகள் மற்றும் அதன் சிறப்புகள்

*அதிசய பிராணி வெளியாகும் நாள்:*

அல்லாஹ்வின் அற்புதங்களில் ஒன்றான ‘தாப்பத்துல் அர்ள்’மக்காவிலிருந்த வெளியாகி மனிதர்களிடம் உரையாடி நல்லவர் கெட்டவரை அடையாள படுத்துமே அந்த அதிசய பிராணி வெளியாகும் நாள் இந்த அரஃபா தினம்தான். அல்லது அதற்கு முன்னால் பின்னாலுள்ள இரண்டு தினங்களில் வெளியாகும்
அறிவிப்பு இப்னு அப்பாஸ் ரலி


*துஆ அதிகம் கபூலாகும் நாள் :*

அரஃபா தினத்தில் அசர் தொழுகையில் அருமை நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் மன ஓர்மையோடு ஈடுபட்டிருந்தார்கள். நாய் ஒன்று குறுக்கே வந்து நாயகத்தின் தொழுகைக்கு இடையூறாக நடந்து செல்ல எத்தனித்தது. என்ன வியப்பு? உடனே அது இறந்து வீழ்ந்தது.
தொழுகை முடித்து தோழர்களிடம் தூய நபி வினவினார்கள்: இந்த நாய்க்கு எதிராக நாயனிடம் துஆ செய்தது யார்?’’
நான்தான் நாயகமே’’ என்றார் ஒரு தோழர்.  
*ஒரு மூமின் எது கேட்டாலும் அல்லாஹ் மறுக்காமல் தருகிற அருமையான நேரத்தில் துஆ செய்திருக்கிறீர்* என்றார்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்.


*ஷைத்தான் தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு அழுகிற நாள் அரஃபா.*


 

 ‘’எனக்கு ஏற்பட்ட அழிவே.. எனக்கு ஏற்பட்ட நாசமே!’’ என்று அவன் அழுகின்ற அந்த பரிதாப நிலை கண்டு மற்ற ஷைத்தான்கள் எல்லாம் “உனக்கு என்ன ஆயிற்று’’என்பார்கள். அறுபது எழுபது ஆண்டுகளாக நான் அழிவிலே (பாவத்திலே) போட்டு வைத்திருந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் இன்று ஒரு நொடியிலே மன்னித்து விட்டான் அதை நினைத்துத்தான் அழுகிறேன் என்பானாம்.
அரஃபா தினத்தின் மாலைப் பொழுதில் மாநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தன சமுதாயத்திற்கு மன்னிப்பு வேண்டியும் அருள் வேண்டியும் அதிக நேரம் துஆ செய்தார்கள். அல்லாஹ் அதற்கு உடனே செவி சாய்த்தான். “நாயகமே நான் ஏற்றுக் கொண்டேன். அதே நேரம் அவர்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு செய்த அநியாயத்தைத் தவிர.( பாதிக்கப்பட்டவன் மன்னித்தாலே தவிர).’’

“யா அல்லாஹ்! நீ நினைத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு நன்மையை வழங்கிவிட்டு பாவியை மன்னித்துவிடலாமே’’
இந்த கோரிக்கைக்கு அப்போது பதில் கிடைக்கவில்லை. அனாலும் நபிகளார் விடவில்லை. மறுநாள் மீண்டும் அதே கோரிக்கையை முன் வைத்தார்கள். அல்லாஹ் அதையும் ஏற்றுக் கொண்டான். நபியே! உங்கள் உம்மத்திற்கு மன்னிப்பு வழங்கிவிட்டேன்’’என்றான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் முகம் மலர்ந்தார்கள்.

தோழர்கள் வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே! என்றைக்குமில்லாத புன்சிரிப்பும் பூரிப்பும் பூமானே தங்கள் பூவிதழ்களில் தெரிகிறதே?’’
“இப்லீஸின் இழிநிலை கண்டுதான் இந்த சிரிப்பு! என் சமூகத்திற்கு நான் வைத்த கோரிக்கையை நாயன் அல்லாஹ் ஏற்றுக் கொண்டதை அறிந்த இப்லீஸ் தாங்க முடியாமல் தன் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு கதறி அழுகிற காட்சியைக் கண்டுதான் புன்சிரிக்கிறேன்’’என்றார்கள்.


*நரக விடுதலை அதிகமாக நடைபெறும் நாள்:*

அல்லாஹ் நரகவிடுதலை அளிப்பதில் அரஃபா தினத்தைவிட அதிகமாக வேறு தினங்களில் அளிப்பதில்லை. அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி பிரசன்னமாகிறான். அவர்களைக்குறித்து அமரர்களிடம் சிலாகித்து பெருமை பாராட்டுகிறான். இவர்களுக்கு என்ன தேவை? என்று பிரியத்தோடு கேட்கிறான்.

*அல்லாஹ் தன் அடியார்கள் குறித்து பெருமிதம் அடைகிற நாள்:*

ஆயிஷா ரலி-அன்ஹா கூறுவார்களாம்: அரஃபா நாள் பெருமிதத்திற்குரிய நாள்’’என்று. அப்படிஎன்றால் என்ன? என்று மக்கள் விளக்கம் கேட்கிறபோது, அன்னை கூறுவார்களாம்:
அரஃபா அன்று அல்லாஹ் உலக வானிற்கு வந்து அமரர்களை அழைத்து, “இதோ பாருங்கள் என் அடியார்களை! இவர்களுக்கு ஒரு தூதரை அனுப்பினேன். அவரை நம்பினார்கள். வேதத்தை அனுப்பினேன் அதையும் நம்பினார்கள். தற்போது உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் என்னிடம் வந்திருக்கிறார்கள் நரக விடுதலையை என்னிடம் வேண்டுகிறார்கள். இதோ நான் தந்துவிட்டேன். அரஃபா நாளைவிட அதிகமாக நரகவிடுதலையை காண முடியாது” என்று கூறுகிறான்.

*அல்லாஹ்வின் அருள் அதிகமாகப் பொழியும் நாள்:*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''சுவனத்தில் முத்து மாணிக்கம் மரகதம் பவளங்களால் ஆன ஒரு மாளிகை உண்டு''.
ஆயிஷா (ரலி): ''யா ரசூலல்லாஹ் அது யாருக்கு?''
நபி: ''அரஃபா நாளில் நோன்பு வைப்பவருக்கு!''
அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் வாசல்களில் 30ஐ திறக்கிறான்; தீமையின் வாசல்களில் 30ஐ அடைக்கிறான்.”


அரஃபா நாளில் என்னனென்ன அமல்கள் செய்யலாம்

  • நோன்பு
  • துஆ
  • பாவமன்னிப்பு
  • புலன்களை அடக்கி பாவத்தைத் தவிர்ந்து கொள்ளுதல் 
  • அரபா நாள் நோன்பு பிடிப்பது

 முன்பின் இரண்டு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்விடம் நான் ஆதரவு வைக்கிறேன் . (முஸ்லிம்: அபூதாவூது) 10
அன்று அதிமகமாக துஆவில் ஈடுபடவேண்டும்.

''அரஃபா நாளில் செய்யும் துஆ சிறந்த துஆவாகும்.''11

அலி ரலி அறிவிக்கிறார்கள் நபிகள் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறினார்கள்: நானும் எனக்கு முன்னுள்ள நபிமார்களும் அரஃபாவில் அதிகம் ஓதிய துஆ: 

لاَ إِلَهَ إِلَّا اللَّهُ ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اللَّهُمَّ اجْعَلْ فِي سَمْعِي نُورًا ، وَفِي بَصَرِي نُورًا ، وَفِي قَلْبِي نُورًا ، اللَّهُمَّ اشْرَحْ لِي صَدْرِي ، وَيَسِّرْ لِي أَمْرِي ، وَأَعُوذُ بِكَ مِنْ وَسْوَاسِ الصُّدُورِ ،12

ஐம்புலன்களைப் பாதுக்காக்கவேண்டும்

Post a Comment

0 Comments